பொது

2023ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் முடிவு; 1,116 பேர் முழு மதிப்பெண்

23/07/2024 06:21 PM

செலாயாங், 23 ஜூலை (பெர்னாமா) --  2023-ஆம் ஆண்டு STPM சோதனைக்குப் பதிவு செய்திருந்த 42 ஆயிரத்து 908 மாணவர்களில் PNGK எனப்படும் மொத்த சராசரி புள்ளி மதிப்பீட்டில் 1,116 பேர், 4.00 எனும் முழு மதிப்பெண்களைப் பெற்று சிறப்புத் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த எண்ணிக்கையில், 803 மாணவர்கள் அல்லது 71.95 விழுக்காட்டினர், B40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மலேசிய தேர்வு மன்றத் தலைவர், பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் இக்வான் தொரிமான் தெரிவித்தார்.

''2023-ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வில், ஐந்து பாடங்களிலும் ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வில் 38 மாணவர்களாக இருந்த அந்த எண்ணிக்கை, 2023-இல் 41-ஆக அதிகரித்துள்ளது. 5ஏ பெற்ற 41 மாணவர்களில் 29 பேர் பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள்'', என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர், செலாயாங்கில் உள்ள மலேசிய தேர்வு மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற 2023 STPM தேர்வு முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர் முஹமட் இக்வான் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, 2023 எஸ்.டி.பி.எம் தேர்வில் ஐந்து மற்றும் நான்கு பாடங்களில் முழுத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் விகிதமும் 75.85 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் அதன் விகிதம் 75.01 விழுக்காடாகும்.

தேர்வு எழுதிய 41 ஆயிரத்து 548 மாணவர்களில், 99.93 விழுக்காடு அல்லது 41,520 பேர், 2023 எஸ்.டி.பி.எம்  சான்றிதழ் பெறுவதற்குத் தகுதிப் பெற்றவர்கள்.

0.07 விழுக்காடு அல்லது 28 மாணவர்கள் மட்டுமே அச்சான்றிதழைப் பெற தகுதியற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)