பொது

காணாமல் போன சம்பவங்களின் புகார் எண்ணிக்கை 900-ஆக நிலைநிறுத்தம்

23/07/2024 06:34 PM

புத்ராஜெயா, 23 ஜூலை (பெர்னாமா) --  2020-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் ஆட்கள் காணாமல் போன சம்பவங்களின் புகார் எண்ணிக்கை 900-ஆக நிலைத்துள்ளது.

அச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது உண்மையல்ல.

மாறாக, அந்த ஐந்தாண்டு காலக்கட்டத்தில் அத்தகைய உயர்வு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

''2020 தொடங்கி 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆட்கள் காணாமல் போன சம்பவங்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து 900-ஆக நிலைத்திருப்பதாக போலீசாரின் அறிக்கைக் காட்டுகிறது. புகாரளிக்கப்பட்ட ஆட்கள் காணாமல் போன சம்பவங்களின் எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதாவது 85-லிருந்து 90 விழுக்காடு வரை பதிவாகி உள்ளது'', என்றார் அவர்.

கடந்த சனிக்கிழமை, இஸ்கண்டார் புத்ரியில் உள்ள பேராங்காடி ஒன்றில் காணாமல் போன ஆறு வயது சிறுமி இன்று காலை பத்தாங் காலியில் உள்ள தங்கும் விடுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கும்போது சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆட்கள் காணாமல் போனதை உட்படுத்திய சம்பவங்கள் கடுமையானது மட்டுமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் கேடிஎன்னும் அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம்மும் உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)