பொது

தமிழ் சார்ந்த துறைகளில் மேற்கல்வியைத் தொடரும் வாய்ப்பு ; இந்திய ஆய்வியல் துறை

23/07/2024 06:46 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) --  பொதுவாகவே, மாணவர்கள் தங்களின் எதிர்காலத்திற்கு ஏதுவாக நிபுணத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல் உள்ளிட்ட துறைகளில் மேற்கல்வியைத் தொடர விரும்புவர்.

அதற்கு, இன்று வெளியாகிய 2023-ஆம் ஆண்டிற்கான எஸ்.டி.பி.எம் தேர்ச்சி முடிவுகளும், அவர்களின் குறிக்கோளைத் திட்டமிட்டு நிறைவேற்ற துணைப்புரியும்.

அதிலும், தமிழ் சார்ந்த துறைகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தைப் வளமாக்குகிறது மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை.

கடந்த 68 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மலேசிய இந்திய சமூக மேம்பாட்டிற்கும் பல பங்களிப்பை வழங்கி வருகின்றது.

அதனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைத்து, தமிழியல் மற்றும் இந்தியவியல் என்று இரண்டு பிரிவுகளாக அத்துறை தற்போது செயல்பட்டு வருகிறது என்கிறார் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர், முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி.

"இந்திய ஆய்வியல் துறையில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று தமிழியல் மற்றொன்று இந்தியவியல். தமிழியல் என்று சொல்லும்போது அதற்கான பாடங்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே போதிக்கப்படும். சங்க கால இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை படிப்பீர்கள். ஆனால், இந்தியவியலில் நம்முடைய இந்தியர்களின் நாகரிகம், பண்பாடு குறித்த பாடங்களை மலாய் மற்றும் ஆங்கில மொழியில் படிப்பீர்கள்'', என்றார் அவர்.

இத்துறையில் கற்பிக்கப்படும் பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் எதிர்காலத்தில் அரசாங்கம் உட்பட தனியார் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையிலும் அவர்களின் வாழ்வியலுக்குப் பயன்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலேயே இத்துறையின் முன்னாள் மாணவர்கள் பலர், நாட்டில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருவதாக அவர் கூறினார்.

''இந்திய ஆய்வியல் துறையில் பட்டபடிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மிகவும் பிரகாசமாக காத்துக் கொண்டிருக்கின்றது. இத்துறையில் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு, அதன் பின் கல்வி புலத்தில் மேலும் ஓராண்டுக்குப் படிப்பை முடித்தோமானால், தகுதிப் பெற்ற ஆசிரியராக பணியாற்ற முடியும்'', என்று அவர் கூறினார்.   

மேலும், எஸ்.டி.பி.எம் மட்டுமின்றி மெட்ரிகுலேஷன், டிப்ளோமா, A லெவல் மற்றும் பவுண்டேஷன் முடித்த மாணவர்கள் எவ்வாறு, இந்திய ஆய்வியல் துறையில் தங்களின் மேற்படிப்பைத் தொடர விண்ணப்பம் செய்வது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

''எஸ்.டி.பி.எம் முடித்த மாணவர்கள் தங்களின் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, தங்களின் விண்ணப்பத்தை யூ.பி.யூ-வில் பதிவேற்றம் செய்யும் போது முதல் மூன்று இடங்களில் மலாயாப் பல்கலைக்கழகத்தைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்'', என்று அவர் விளக்கினார்.

இதனிடையே, இந்திய ஆய்வியல் துறைக்கான விண்ணப்பம் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இயங்கலை வழியாக முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்திய ஆய்வியல் துறையைப் பற்றி மேலதிக தகவல்களுக்கு அத்துறையின் விரிவுரையாளர்களைத் தொடர்பு கொள்வதுடன் அத்துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலும் அத்தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)