பொது

தென்கிழக்காசியாவில் கோலாலம்பூர் ஐந்தாவது மிகவும் ஆபத்தான நகரமா? - விளக்கம் பெறப்படும்

23/07/2024 07:49 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- தென்கிழக்காசியாவில் சுற்றிப் பார்க்க ஐந்தாவது மிகவும் ஆபத்தான நகராக கோலாலம்பூரை பட்டியலிட்டிருக்கும் FORBES ADVISOR அறிக்கை தொடர்பில் விளக்கம் பெறப்படும் என்று, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உலகின் மிக அமைதியான நாடுகளில் மலேசியாவை 10ஆவது இடத்தில் பட்டியலிட்டு கடந்த ஜூன் மாதத்தில் பொருளாதாரம் மற்றும் அமைதி கழகம், IEP வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டிற்கு முரணாக FORBES ADVISOR-சின் அந்த அறிக்கை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையாக மட்டுமே நான் கருதுகிறேன். எந்தவொரு பகுப்பாய்வாக இருந்தாலும், பொது அமைதியை உறுதிசெய்ய கேடிஎன் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை (பிடிஆர்எம்) உறுதி கொண்டுள்ளன. அது எங்களின் கடப்பாடாகும்,'' என்றார் அவர்.

தென்கிழக்காசியாவில், சுற்றிப் பார்க்க ஐந்தாவது மிகவும் ஆபத்தான நகரமாக கோலாலம்பூரை, Forbes Advisor அறிக்கை இம்மாதம் ஜூலை 19-ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விளக்கமளித்தபோது டத்தோ ஶ்ரீ சைஃபுடின் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்ட இதர நகரங்களில் மியன்மாரின், யங்கூன், பிலிப்பைன்ஸ்-சின் மணிலா, இந்தோனேசியாவின் ஜகார்த்தா வியட்நாமின் Ho Chi Minh மற்றும் தாய்லாந்தின் பேங்காக் ஆகியவை அடங்கும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)