பொது

மதியிறுக்க குறைபாடுடைய சிறுவனைத் தாக்கிய குற்றச்சாட்டை மறுத்த ஆசிரியர்

24/07/2024 07:15 PM

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24 (பெர்னாமா) -- கடந்த வாரம் சிறப்பு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மதியிறுக்க குறைபாடுடைய சிறுவனைத் தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஆசிரியர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினார்.

இம்மாதம் ஜூலை 16-ஆம் தேதி காலை மணி 11.50-க்கு சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பராமரிப்பு மையத்தில் ஆறு வயது சிறுவனைத் தாக்கியதாக 33 வயதான எம்.தினேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 352-டின் கீழ் அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட தினேஷிற்கு ஆயிரம் ரிங்கிட் ஜாமீனையும் இவ்வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட சிறுவனை தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையையும் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அஸ்மா சம்ரி பரிந்துரைத்தார்.

அஸ்மாவின் பரித்துரைக்கு, தினேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒய்.ஷர்வின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க அனுமதித்த மாஜிஸ்திரேட், கூடுதல் நிபந்தனைக்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் மறு செவிமடுப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)