பொது

இணைய பகடிவதை குறித்த விழிப்புணர்வு; மாடல் அழகி ஜென் தியோவின் #DARETOSHOUT பிரச்சாரம் அறிமுகம்

24/07/2024 07:19 PM

கோலாலம்பூர், ஜூலை 24 (பெர்னாமா) -- இணைய பகடிவதை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாடல் அழகியும் 2018-ஆம் ஆண்டு மலேசிய அழகுத் தாரகையுமான ஜென் தியோ, #DareToShout எனும் இணைய பகடிவதைக்கு எதிரான பிரச்சாரத்தை சமூகவலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இணையத்தை நன்முறையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விரிவுபடுத்துவதற்காக தமது சொந்த முயற்சியின் பேரில் இப்பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

"பெரியவர்களாகிய நாம் இணையத் தளத்தில் இழிவாக நடந்துகொள்வது சரியல்ல என்று அவர்களிடம் சொல்வது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நமது அரசாங்கம் இதை குற்றமாக்கப் பார்ப்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில சமயங்களில் மாணவர்களாக இருந்தாலும் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் அறியாமல் இருப்போம். எனவே அவர்களுக்கு எது நல்லது, எது சரி எது தவறு என்று சொல்வது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்," என்றார் அவர்.

இன்று ஸ்டெல்லா மேரிஸ் இடைநிலைப்பள்ளியில் பயிலும் படிவம் ஒன்று முதல் நான்கு வரையிலான 200 மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

இப்பிரச்சாரம், அனைத்து பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் ஜென் தியோ தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)