பொது

பலத்த காற்றினால் நிறுத்தப்பட்டிருந்த ஃபெரி கயிறு அறுந்து நீரில் மூழ்கியது

24/07/2024 07:23 PM

பட்டர்வொர்த், ஜூலை 24 (பெர்னாமா) -- பட்டர்வொர்த், Pangkalan Sultan Abdul Halim-இல் நிறுத்தப்பட்டிருக்கும் பினாங்கு மாநிலத்தின் சின்னமான ஃபெரி, இன்று அதிகாலை ஏற்பட்ட பலத்த காற்றினால் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கியது.

அந்த  காப்பாஸ் தீவு ஃபெரி, நீரில் மூழ்கியது தொடர்பான புகார் அதிகாலை மணி 3.26 அளவில் தங்கள் தரப்பிற்கு கிடைத்ததாக பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் டத்தோ இயோ சூன் ஹின் தெரிவித்தார்.

அந்த ஃபெரியில் கசிவு ஏற்பட்டு பழுது பார்க்க முடியாத நிலையில் இருந்ததால் 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி Prasarana Malaysia நிறுவனம் அதனை மீண்டும் பினாங்கு துறைமுக ஆணையத்திடம் ஒப்படைத்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையில் இயோ தெளிவுபடுத்தினார்.

காப்பாஸ் தீவு ஃபெரி உட்பட மாநில சின்னமான அவற்றை சுற்றுலா அம்சங்களாக பயன்படுத்த பல தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பினாங்கு துறைமுக ஆணையம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இருப்பினும், குத்தகை ஒப்பந்தத்தை சில தரப்பினர் பின்பற்றாததால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவை நிறுத்தப்பட்டன.

126 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ஃபெரி சேவை, 2020-ஆம் ஆண்டு முழுமையாக நிறுத்தப்பட்டது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)