பொது

எஸ்.டி.பி.எம் தேர்வில் ஸ்ரீ ஈப்போ படிவம் 6 உயர் நிலைக் கல்லூரி இந்திய மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி

24/07/2024 07:34 PM

ஈப்போ, ஜூலை 24 (பெர்னாமா) -- நேற்று எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகிய வேளையில், அத்தேர்வில் அதிகமான இந்திய மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில், ஈப்போவில் உள்ள ஸ்ரீ ஈப்போ படிவம் 6 உயர் நிலைக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்களும் அடங்குவர்.

இக்கல்லூரியில் மொத்தம் 91 மாணவர்கள் தேர்வு எழுதிய வேளையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பாக தமிழ்மொழி தேர்வு எழுதிய 17 இந்திய மாணவர்களின் சிறந்த மதிப்பெண்ணும் கல்லூரியின் உயர் அடைவுநிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தமிழாசிரியர் நாகராணி சிமிஞ்சலம் தெரிவித்தார்.

"இக்கல்லூரியில் தமிழ்மொழி தேர்வுக்கு அதிகம் முக்கியதுவம் கொடுக்கப்பட்டது. அதனால் தான் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக தேர்வை எழுதினர். அதன் பயனாக அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சி கண்டுள்ளனர். இனி இவர்கள் தமிழ்துறை சார்ந்த உயர்க்கல்வியைத் தேர்தெடுப்பதில் முனைப்புக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்," என அவர் தெரிவித்தார்.

இக்கல்லூரியில் பயிலும், மகிழம்பூவைச் சேர்ந்த இரட்டையரான சாதனா சரவணனும், சாதிகா சரவணனும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளதாக அவர்களின் தாயார் கூறினார்.

"இந்த வெற்றியை என் பிள்ளைகள் சுலபமாகப் பெறவில்லை. இதற்காக அல்லும் பகலும் கண் விழித்து படித்தனர். மற்ற பாடங்களுடன் சேர்த்து தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது," என்றார் அவர்.
 
அவரைப் போன்று சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மஹா ரூபிணி சங்கர்,  பூர்வி கிருஷ்ணமூர்த்தி, ஷர்மினி சிவராஜு  தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்த்துறை சார்ந்து மேற்கல்வி பயில்வதற்கு ஸ்ரீ ஈப்போ படிவம் 6 உயர் நிலைக் கல்லூரி சிறந்த அடித்தளமிட்டிருப்பதாகவும் அம்மாணவர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)