பொது

வங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் தமிழை இணைக்கும் களமுயற்சி

24/07/2024 08:27 PM

கோலாலம்பூர், ஜூலை 24 (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவிலுள்ள மலேசிய மின்னியல் கட்டண முறை MEPS-இன் 1,138 தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரம் ATM-இல், தமிழ்மொழியும் ஒரு மொழியாக இணைக்கப்பட்டுள்ளதை பலரும் இன்னும் அறியாமல் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, MEPS ATM-இல் தமிழ்மொழியை பரிவர்த்தனைக்கான தேர்வாகப் பயன்படுத்துவதும் குறைவாகவே உள்ளது.

எனவே, வங்கிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் ATM இயந்திரத்தில் தமிழ்மொழியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் ATM இயந்திரத்திலும் தமிழ்மொழியை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் PRIHATIN MUHIBBAH சங்கம் முனைப்போடு களமிறங்கியுள்ளதாக அதன் ஆலோசகர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.

இதன் தொடர்பில் மலேசிய வங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை இன்று இரண்டாவது முறையாக தமது தரப்பு சந்தித்ததாக ம.இ.கா உதவித் தலைவருமான டத்தோ முருகையா கூறினார்.

மூவினத்தோர் வாழும் மலேசியாவில் வங்கி சம்பந்தப்பட்ட செயல்முறைகளில் தமிழ் மொழியையும் ஒரு மொழியாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்பது பலகாலமாக நீடிக்கும் போராட்டமாகும்.

அந்தப் போராட்டத்திற்கு பலனாக சில ஆண்டுகளுக்கு முன்னர், MEPS எனப்படும் தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரங்களில் தமிழ் இணைத்து கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வங்கிகளிலும் குறிப்பாக அதன் ATM இயந்திரங்களில் தமிழை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக முருகையா விவரித்தார்.

"பப்ளிக் வங்கி, ஹொங் லியோங் போன்று நாட்டில் சில குறிப்பிட்ட வங்கிகளில் தேசிய மொழி, ஆங்கிலத்தை அடுத்து சீன மொழியும் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று தமிழ்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நாட்டில் தமிழ் தழைப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும்," என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்ப்பள்ளி பாடநூலிலும் REKA BENTUK DAN TEKNOLOGI எனப்படும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் புத்தகத்திலும் தமிழில் ATM இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து FOLIO முறையில் போதிக்கப்படுவதையும் முருகையா சுட்டிக்காட்டினார்.   

இத்தகையச் செயல்முறையனாது உள்நாட்டவர்கள் மட்டுமின்றி, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய நாட்டவர்களுக்கும் இலகுவாக இருக்கும் என்றும் முருகையா குறிப்பிட்டார்.

"இப்போது இந்திய நாட்டுப் பிரஜைகளும் அதிகமாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கின்றனர். அந்நிலையில் தமிழ்மொழியில் அதன் சேவை இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும். அவர்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளைச் சேர்ந்த இந்தியர்களுக்கும் இது பொருந்தும்," என்றார் அவர்.

மேலும், வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்களில் தமிழ் மொழியை இணைத்துக் கொள்வதற்கான சில நியாயமான முக்கியத்துவங்களை அதிகாரிகளிடம் விவரித்தபோது, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த மாத இறுதியில் அனைத்து வங்கி உரிமையாளர்களையும் சந்தித்து இவ்விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கவிருப்பதோடு விரைவில் இதற்கு தகுந்த தீர்வு காணப்போவதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து உறுதியளித்திருப்பதாக இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ முருகையா தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)