சிறப்புச் செய்தி

மோசமான பாதிப்புகளில் இருந்து விடுபட வீட்டிலேயே ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வலியுறுத்து

24/07/2024 08:49 PM

கோலாலம்பூர், 24 ஜூலை (பெர்னாமா) -- குறிப்பிட்ட வயதைக் கடந்தப் பின்னர், ஒருவருக்கு ஏற்படும் நாள்பட்ட நோய்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தமாகும்.

ஒருவர் தங்களின் ரத்த அழுதத்தை வீட்டிலிருந்தே பரிசோதிப்பதன் வழி தொடக்கக் கட்டத்திலேயே இந்நோய்க் கண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மோசமான நோய்ப் பாதிப்புகளில் இருந்தும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிறார் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு துறையின் மூத்த துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ரூபன் ராமகிருஷ்ணன்.

ஒருவர், வீட்டில்  AUTOMATIC BP MONITAR எனப்படும் ரத்த அழுத்த பரிசோதனைக் கருவியை வைத்திருப்பதன் வழி, தொடர்ந்து தங்களின் ரத்த அழுத்த அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம், இந்நோய்க் கண்டிருக்கும் அல்லது அதற்கான சிகிச்சையைப் பெற்று வரும் ஒருவருக்கு மருத்துவர் மேல் சிகிச்சைக்கான முடிவை எடுக்க சுலபமாக இருக்கும்.

எனவே, அவ்வப்போது வீட்டிலிருந்தவாறு இரத்த அழுத்தத்தைப் பரிசோதனைச் செய்துக் கொள்வது அதன் உண்மையான அளவை அறித்து கொள்ள முடியும் என்று டாக்டர் ரூபன் ராமகிருஷ்ணன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அதோடு, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உணவு, உடற்பயிற்சி உட்பட தினசரி வாழ்க்கை முறையில் சில நடவடிக்கைகளை மாற்றியமைக்க இந்தச் சுயப் பரிசோதனைக் கருவி உதவும் என்றும் டாக்டர் ரூபன் தெளிவுப்படுத்தினார்.

''உணவில் அதிகமான உப்பைச் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஐந்து கிராம் உப்பை மட்டும்தான் உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் பருமனாகாமல் இருப்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

உப்பு அதிகம் உள்ள உணவை உட்கொள்வது, புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதுமான தூக்கம் இல்லாதது ஆகியவை உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், சில நேரங்களில் வெகுநேரம் காத்திருப்பதால், நடப்பதால் ஏற்படும் அசதி போன்றவற்றினால் சிகிச்சையகங்கள் அல்லது மருத்துவமனைகளில் பரிசோதிக்கும்போது ரத்த அழுத்தம் அதிகமாக பதிவாகலாம்.

அதைக் கட்டுப்படுத்துவதற்கான சில ஆலோசனைகளையும் டாக்டர் ரூபன் பகிர்ந்து கொண்டார்.

''WHITE COAT BP எனும் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு மூச்சுப் பயிற்சி, போதுமான அளவிற்கு தூக்கம் ஆகியவைத் தேவை. மருத்துவமனைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வீட்டிலேயே பரிசோதித்துக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்லும் போது துணைக்கு ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும்,'' என்றார் அவர்.

இரு வகைப்படும் இந்த உயர் இரத்த அழுத்த நோயைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்று எச்சரித்த டாக்டர் ரூபன் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் விளக்கினார்.

2023ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பின் படி, நாட்டில் 29.2 விழுக்காடு அல்லது மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், 11.9 விழுக்காட்டினர் குறிப்பாக 18 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் இந்நோய்க் கண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக டாக்டர் ரூபன் தெரிவித்தார்.

எனவே, வயது வரம்பு கணக்கில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும் இரத்த அழுத்த நோயின் விளைவைக் கருத்தில் கொண்டு மக்கள் அவ்வப்போது பரிசோதனைச் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502