பொது

தெக்குன் வாரியக் குழு உறுப்பினராக டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நியமனம்

24/07/2024 08:47 PM

புத்ராஜெயா, ஜூலை 24 (பெர்னாமா) -- தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் முயற்சியில் தெக்குன் நேஷனல் வாரியக் குழு உறுப்பினராக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நியமிக்கப்பட்டார். 

இன்று மதியம் புத்ராஜெயாவிலுள்ள தமது அமைச்சில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், டாக்டர் குணராஜ் ஜோர்ஜிடம் நியமனக் கடிதத்தை டத்தோ ரமணன் வழங்கினார். 

அவரின் நியமனம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது.   

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் துணைத் தலைமை செயலாளர் டத்தோ ஹாஜி ஸம்ரி பின் சாலே, துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின், மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், தெக்குன் நேஷனல் இயக்குநரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ அடாம் பின் அப்துல் கனி, தெக்குன் நேஷனல் வாரியக் குழு தலைவர் டத்தோ அப்துல்லா சானி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு டாக்டர் குணராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிறு, குறு, நடுத்தர இந்திய தொழில்முனைவோரின் முதன்மை தேர்வாக ‘தெக்குன் ஸ்புமி’ விளங்கி வருகிறது. அவர்களுக்கு உதவிட மூன்று கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இருந்தது. 

அதனை அதிகரிக்கும் வகையில் ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’ எனும் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்திய  டத்தோ ரமணன், மேலும் மூன்று கோடி  ரிங்கிட் நிதியை அறிவித்தார். 

இதன் வழி, இன்னும் அதிகமான இந்திய தொழிமுனைவோர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இம்முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் டாக்டர் குணராஜ் ஜோர்ஜின் நியமனம் அமைந்திருப்பதாகவும் டத்தோ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார். 

இதற்கிடையில், தம்மீது முழு நம்பிக்கை வைத்து, தெக்குன் நேஷனல் வாரியக் குழு உறுப்பினர் பதவிக்கு சிபாரிசு செய்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கும், நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சர் இவோன் பெனடிக்கிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)