பொது

20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்டு ஆராய்ச்சி, மொழி பெயர்ப்பு தொடர்புடைய திட்டங்கள்

25/07/2024 12:41 PM

கோலாலம்பூர், 24 ஜூலை (பெர்னாமா) --  கடந்தாண்டு ஜூலை மாதம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய ஆய்வியல் துறைக்கு அறிவித்த 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மொழி பெயர்ப்பு தொடர்புடைய திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார் நிலையில் உள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களில் அப்பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி கூறினார்.

உலகத் தமிழர்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்தாண்டு ஜூலை மாதம் 11-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

அம்மாநாட்டில், சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய ஆய்வியல் துறைக்கு 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். 

ஆராய்ச்சி, மொழிப்பெயர்ப்பு மற்றும் இந்திய ஆய்வியல் துறையின் மேம்பாடு ஆகிய மூன்று நோக்கங்களுக்காக அந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்நிதி பல்கலைக்கழகத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி கூறினார்.

''பிரதமர் மாநாட்டின் போது அறிவித்திருந்த இரண்டு மில்லியன் தொகை முறையாக பல்கலைக்கழகத்திடம் வந்து சேர்ந்து விட்டது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் கருவூல மையம் அந்த நிதியை நீர்வாகம் செய்யும். பின்பு எங்களின் கலைப்புலத்தின் முதல்வர் உட்பட துறையின் தலைவர்கள் சேர்ந்து ஒரு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும்'', என்றார் அவர்.

தற்போது கலைப் புலத்தின் செயற்குழு அந்நிதியை நிர்வகிப்பதோடு, வழங்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப அந்நிதியைப் பயன்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

''இரண்டு மில்லியன் தொகைக்கான ஆய்வுகள், மொழியாக்க பணிகள், அதற்குறிய திட்டங்கள் அனைத்தும் முறையாக கிடைத்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் அதற்கான செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு முன்மொழிவு திட்டங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதற்கான முடிவுகள் தெரியப்படுத்தப்படும்'', என்று அவர் கூறினார்.

பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)