பொது

இரு சிறுமிகளைக் கடத்திய வாழைப்பழ பொறியல் வியாபாரிக்கு 24 மாத சிறை

25/07/2024 04:37 PM

சுங்கை பெசார், 25 ஜூலை (பெர்னாமா) --  கடந்த ஜூலை 19ஆம் தேதி, கோலா சிலாங்கூரில் இரு சிறுமிகளைக் கடத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒருவர் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, வாழைப்பழ பொறியல் வியாபாரியான அவ்வாடவருக்கு இருபத்து நான்கு மாத சிறைத்தண்டனையும் ஈராயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது

குற்றம் சாட்டப்பட்ட முஹமட் ஷரிசா ஒத்மான் என்ற அந்த ஆடவர், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக இரண்டு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் சித்தி ஹஜார் அலி தெரிவித்தார்.

ஜூலை 19 மாலை மணி 6.30 அளவில் கோலாசிலாங்கூர், ஜெராமில் உள்ள தாமான் இகான் எமாசில், முறையே ஆறு மற்றும் ஏழு வயதுள்ள இரண்டு சிறுமிகளைக் கடத்தியதாக இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகிய முஹமட் ஷரிசா மீது இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 363-இன் கீழ் இக்குற்றம் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அது நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அவ்வாடவர் வீட்டின் முன் விளையாட்டிக் கொண்டிருந்த அவ்விரு சிறுமிகளையும் PERODUA BEZZA ரக காரில் கடத்தி அங்கிருந்து தப்பியதாக கூறப்பட்டது.

தமக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால், பெண் பிள்ளை வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் அச்செயலைப் புரிந்ததாக அவரின் சார்பில் வழக்காடிய தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த முஹமட் முக்ரி முஹமட் கைரி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)