பொது

சிறுமி கடத்தலில் தொடர்புடைய நால்வர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படலாம்

25/07/2024 04:48 PM

ஜோகூர் பாரு, 25 ஜூலை (பெர்னாமா) --  இஸ்கண்டார் புத்ரியில் உள்ள பேரங்காடியில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஜூலை 23 முதல் நாளை வரை நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படலாம்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கடத்தல் காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

''தேவை இல்லையெனில், நாளை அவர்களுக்குப் போலீஸ் ஜாமின் அளிக்கப்படலாம். ஆனால் அது அவ்வழக்கின் அண்மைய வளர்ச்சி நிலையை உட்படுத்தியது. மேலும் இவ்விசாரணைக்காக கைது செய்யப்பட்ட 31 வயதுடைய மற்றோர் ஆடவரின் தடுப்புக் காவல் ஜூலை 29-ஆம் தேதியோடு நிறைவடைவதால், அவர் மீது விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது'', என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் யாவரையும் கடத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் அறிந்திருக்கவில்லை.

மேலும், அச்சிறுமியின் தாயார் நிதிப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற கூற்றினையும் குமார் மறுத்தார்.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)