விளையாட்டு

2024-ஆம் ஆண்டு சுக்மா விளையாட்டு போட்டி; கலமிறங்கும் பினாங்கு கபடி அணி

25/07/2024 05:54 PM

ஜார்ஜ்டவுன், 25 ஜூலை (பெர்னாமா) --  ஆகஸ்ட் 17முதல் 24-ஆம் தேதி வரை சரவாக்கில் நடைபெறவிற்கும், 2024 சுக்மா விளையாட்டுப் போட்டியில் வெற்றியை இலக்காகக் கொண்டு பினாங்கு கபடி அணி களத்தில் இறங்கவிருக்கின்றது.

இம்முறை தேசிய அளவிலான நான்கு விளையாட்டு வீரர்கள் தங்கள் குழுவில் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது புதிய வியூகத்துடன் தாங்கள் தயாராக இருப்பதாக பினாங்கு கபடி அணியின் பயிற்றுநர் ஜகன் ராஜேந்திரன் கூறுகிறார்.

18 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் 20 விளையாட்டு வீரர்களுடன் அந்த நான்கு தேசிய விளையாட்டு வீரர்களும் போட்டியிட உள்ளதாக கடந்த எட்டு மாதங்களாக அவ்வணிக்குப் பயிற்றுநராக இருக்கும் ஜகன் தெரிவித்தார்.

''இந்த முறை கடுமையான ஒரு போட்டியைச் சுக்மாவில் நீங்கள் பார்க்கலாம். புதிய உத்திகளைக் கொண்டு ஒவ்வொரு அணியும் கலமிறங்கும். எனவே, அனல் பறக்கும் கடும் போட்டி நிச்சயம் இருக்கும்'', என்றார் அவர்.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டியில் இம்முறை சரவாக், கோலாலம்பூர் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்கள் தங்களுக்குச் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இதனிடையே, புதிய உத்திகளைக் கையாள்வதோடு போட்டியில் வெற்றி கிண்ணத்தைத் தட்டிச் செல்வதற்கான பயிற்சிகள் அனைத்தும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய கபடி விளையாட்டு வீரர் மோகேஸ்வரன் முருகேசன் கூறினார்.

''போட்டிக்கான பயிற்சிகள் பல நாட்களாக நடந்து கொண்டிருக்கின்றது. எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து தரப்பிடமிருந்தும் ஆதரவுகள் பலமாக கிடைத்து கொண்டிருக்கின்றது. நிச்சயம் இம்முறை வெற்றி கோப்பையைத் தட்டி விடுவோம்'', என்றார் அவர்.

இதனிடையே, கடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் தங்கப் பதக்கம் வென்ற வேளையில், கோலாலம்பூர் வெள்ளியும் சரவாக் மற்றும் பேராக் அணிகள் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தன.

பெண்கள் பிரிவில், கோலாலம்பூர் முதல் இடத்தில் தங்கம் வென்ற நிலையில் சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)