விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி; அண்மையத் தகவல்களை வழங்க பெர்னாமா உறுதி

25/07/2024 06:11 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) --  பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் முயற்சியில் 26 தேசிய விளையாட்டு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் முக்கிய விளையாட்டு தருணத்தைப் பதிவு செய்வதை மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் தவறவில்லை.

ஒலிம்பிக் தொடர்பான அண்மையச் செய்திகளை ஒளிபரப்பவும் நாட்டின் விளையாட்டு வீரர்களின் வெற்றிகள், தியாகங்கள் மற்றும் தருணங்களைப் பற்றிய தகவல்களை வழங்கவும் பெர்னாமா உறுதிக் கொண்டுள்ளதாக அதன் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ் தெரிவித்தார்.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் மலேசியக் குழுவைப் பற்றிய விரிவான தகவல்களை நாட்டின் விளையாட்டு ரசிகர்களுக்கு வழங்குவதைப் பெர்னாமா உறுதி செய்யும்.

அதற்காக பெர்னாமாவின் விளையாட்டுச் செய்திப் பிரிவுத் தலைவர் விக்னேஸ்வரன் ராமனும் புகைப்படக் கலைஞர் ஹமாட் இஸ்கண்டார் கமாரூசாமானும் ஜூன் 23ஆம் தேதி பாரிஸைச் சென்றடைந்தனர்.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக்கை பெர்னாமா டிவி, பெர்னாமா வானொலி மற்றும் அதன் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து தளங்களிலும் பார்க்க முடியும்.

இதனிடையே, ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இரவு மணி 8.30க்கு இடம் பெறும் MISI D' OR 2024 என்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஒலிம்பிக் பற்றிய செய்திகள் மற்றும் அண்மைய நிலவரங்கள் குறித்து நேரடியாக ஒளிப்பரப்பப்படும் என்று அருள் ராஜு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)