தன்னம்பிக்கை  மற்றும் ஆர்வத்தினால் பெண்கள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் 

25/07/2024 08:34 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- இன்றைய பொருளாதார சூழ்நிலையில், நிரந்தர பணியில் இருந்தாலும் கூடுதல் வருமானத்திற்காக வர்த்தக துறையில் ஆர்வம் காட்டும் மக்கள் ஏராளம்.

இந்திய சமுதாயத்தில் பலர் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் இதில் ஈடுபடும் வேளையில், இந்த வர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

இதற்கு, வர்த்தகம் மீது பெண்கள் கொண்டிருக்கும் ஆர்வமும் சுயமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கையும், முக்கிய காரணம் என்பதை 'வணிக உலகம்' அங்கத்தில் விளக்குகின்றார், பினாங்கு மாநில மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், MAICCI--யின் உறுப்பினர், சிவசங்கரி கார்த்திகை ராஜூ. 

கடந்த காலங்களைப் போன்று குடும்பம், குழந்தைகள் என்ற கட்டுப்பாட்டுகுள் இல்லாமல் நிறைய நடவடிக்கைகளில் பெண்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்.  

அதில், வர்த்தகத் துறை அவர்களுக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத் தருவதோடு சுயமாக வருமானத்தை ஈட்ட வழிவகுப்பதால்தான்,  பெரும்பாலான பெண்கள் தற்போது வர்த்தகத்தில் கால் வைக்க விரும்புவதாக சிவசங்கரி தெரிவித்தார்.

''இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பெண்களுக்கு வர்த்தகம் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதில் ஈடுபட முனைப்புக் காட்டுகின்றனர். வர்த்தகம் சிறந்த வருமானத்தை தரும் என்று உணர்ந்து அவர்கள் இதில் ஈடுபட முடிவு செய்கின்றனர்,'' என்றார் அவர்.

இதனிடையே, தற்போது சமூக ஊடகத்தின் மூலமும் பெண்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

இது நன்மை என்றாலும், சில முறையற்ற பயன்பாட்டால் ஆபத்தும் இதன் வழி தொடரும் என்பதை உணர்ந்து பெண்கள் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

''வர்த்தகத்தில் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். பயனீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நேர்மறையற்ற விஷயங்களைப் பகிரக் கூடாது,'' என்றார் அவர்.

இந்நிலையில், வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டோ, அல்லது அதனை மேம்படுத்த எண்ணம் கொண்டிருக்கும் பெண்களுக்கு உதவ பினாங்கு மாநில மைக்கி மூலம் தமது தரப்பு செயல்பட்டு வருவதாக சிவசங்கரி கூறினார்.

அதோடு, சிகை அலங்காரம் மற்றும் குழந்தைப் பிறப்புக்குப் பின்னரான பராமரிப்பு தொடர்பிலும் பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அழகு கலையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்கும் சிவசங்கரி தெரிவித்தார்.

எனவே, சுய காலில் நின்று, வர்த்தக ரீதியில் முன்னேற நினைக்கும் பெண்கள் துணிந்து தங்களின் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். 

சவால் நிறைந்ததாக இருந்தாலும், சாதனை செய்வதற்கு வர்த்தகமே பெண்களின் பலமாக இருப்பதாக சிவசங்கரி, இன்று பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502