உலகம்

வங்காளதேசத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

26/07/2024 04:26 PM

டாக்கா, 26 ஜூலை (பெர்னாமா) --  வங்காளதேசத்தில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தொடரப்படலாம் என்று நம்பப்படுவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அசடுஸமான் கான் தெரிவித்தார்.

அந்நாட்டின் தலைநகர் டாக்கா உட்பட மேலும் மூன்று நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாக அனாடொலு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நகரங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக அசடுஸமான் கான் கூறினார்.

இந்நிலையில் தங்களின் 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கி, அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 204 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் நாளிதழான ப்ரோதோம் அலோ செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும், நாடு முழுவதும் 5,500 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)