உலகம்

காசாவில் மனிதாபிமான பேரழிவு - ஐ.நா. கவலை

26/07/2024 04:36 PM

காசா, 26 ஜூலை (பெர்னாமா) --  காசாவில் மனிதாபிமான நிலைமை பேரழிவு கட்டத்தில் இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கடுமையான இராணுவ தாக்குதலினால் காசா பகுதியில் பாதுகாப்பு சீர்குழைந்துள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

காசா மக்களுக்காக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளும் முழுமையாக சென்றடைவதில் சிரமம் ஏற்படுவதாக, வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

"முதலாவதாக, நாம் முழு சட்டங்கள் அமல்படுத்தப்படாத சூழ்நிலையில் இருக்கிறோம். சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக இல்லை. காசா பகுதி எங்கும் பாதுகாப்புப் பொறுப்பில் யாரும் இல்லை. அதனால் உதவிப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் எந்த நேரத்திலும் கொள்ளையடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். மிக மோசமானது என்னவென்றால் தொடர்ந்து மூன்று நாள்களில் ஐ.நா. உதவிப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தீயினால் பாதிக்கப்பட்டன", என்றார் அவர்.

தெற்கு காசா நகரமான கான் யூனிசின் சில பகுதிகளை விட்டு வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தெருக்களில் தூங்குவதாகக் கூறுப்படுகிறது.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலினால் இதுவரை 39 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)