உலகம்

காசாவில் நிகழும் கொடுமையைப் பார்த்து இனி அமைதியாக இருக்க மாட்டேன் - கமலா ஹரிஸ்

26/07/2024 04:54 PM

வாஷிங்டன் டி.சி, 26 ஜூலை (பெர்னாமா) --  அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸுடன் சந்திப்பு நடத்தினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அச்சந்திப்பில் காசா போர் தொடர்பான தமது கருத்துகளை கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

"உயிரழந்த குழந்தைகளின் படங்கள் மற்றும் பசியால் வாடும் மக்கள் பாதுகாப்புக்காக ஓடுவது போன்ற படங்கள்; சில சமயங்களில் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது முறையாக இடம்பெயர்கின்றனர். இந்த அவலங்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. துன்பங்களுக்கு நாம் உணர்ச்சியற்றவர்களாக மாற அனுமதிக்க முடியாது. நான் இனி அமைதியாக இருக்க மாட்டேன்", என்றார் அவர்.

கடந்த ஒன்பது மாதங்களாக காசாவில் மேற்கொள்ளப்படும் இராணுவத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக கமலா கவலை தெரிவித்தார்.

ஆகவே, இரு தரப்பின் நலன் கருதி உடனடியாக போர்நிறுத்தத்திற்கான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று அவர் நெதன்யாகுவை வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கமலா ஹரிசை நெதன்யாகு சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)