பொது

பள்ளிகளில் நிகழ்ச்சிகள் & நன்கொடை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நிலைநிறுத்தப்படும்

26/07/2024 06:55 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) -- பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் நன்கொடை வழங்குவதற்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் நிலைநிறுத்தப்படும்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சிகளில் பள்ளி வளாகத்திற்குள் மதுபானங்களை காட்சிப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் கூடாது என்று அந்த வழிகாட்டுதலில் இடம் பெற்றிருப்பதை கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மதுபான நிறுவனங்களை உட்படுத்திய நன்கொடை வழங்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.

அண்மையில், ஒரு பள்ளிக்கு மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் நன்கொடை வழங்கியது  தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி மையங்கள், வெளி தரப்பினர் வழங்கும் நன்கொடைகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)