பொது

BRICS-இல் இணைய ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பிய மலேசியா

28/07/2024 06:09 PM

புத்ராஜெயா, 28 ஜூலை (பெர்னாமா) -- BRICS எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அரசாங்கங்களின் அமைப்புடன் இணைவதற்கு மலேசியா ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

BRICS அமைப்பில் உறுப்பினராகவோ அல்லது வியூக பங்காளியாகவோ இணைய மலேசியா எண்ணம் கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

சனிக்கிழமை தொடங்கி மலேசியாவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அன்வார் இப்ராஹிமுடன் இன்று சந்திப்பு நடத்தினார்.

இச்சந்திப்பில், BRICS-இல் மலேசியா இணைவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில், முதலீடு, வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

இச்சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் ஹசான் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் காலிட் நோர்டின் மற்றும் உயர்க் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2023 ஆம் ஆண்டில் மலேசியாவுடனான ரஷ்யாவின் வர்த்தகம் 15 விழுக்காடு அதிகரித்து 310 கோடி அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502