பொது

TVET: 200 இந்திய மாணவர்கள் சீனாவிற்கு அனுப்பப்படுவர்

28/07/2024 06:18 PM

பாகான் டத்தோ, 28 ஜூலை (பெர்னாமா) -- சீனாவில், TVET எனப்படும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை மேற்கொள்ள 200 இந்திய மாணவர்களை அரசாங்கம் அந்நாட்டிற்கு அனுப்பவிருக்கிறது.

அந்த இலக்கு வெற்றி பெற்றால் அதே திட்டத்திற்காக மேலும் 200 மாணவர்கள் அனுப்பப்படுவர் என்று துணை பிரதமர் டத்தோ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

கல்வி விவகாரத்தில், இந்தியர், மலாய்க்காரர்கள், சீனர் என்ற இன பாகுபாடு பார்க்காமல் அனைத்து இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை தங்கள் தரப்பு உறுதிசெய்யும் என்று தேசிய TVET மன்ற தலைவருமான டத்தோ டாக்டர் அஹ்மாட் சாஹிட் கூறினார்.

இந்திய மாணவர்கள் இலவசமாக சீனாவில் டிவெட் பயிற்சியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தங்கள் தரப்பு செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

சபா, சரவாக் உட்பட அனைத்து இன மாணவர்களும் சீனாவில் TVET கல்வியைப் பயில்வதற்கான அனுபவத்தை வழங்கும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தவிருப்பதாக முன்னதாக டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்திருந்தார்.

சீனாவில் டிவெட் பயிற்சியை மேற்கொள்ள 1,000 மலேசிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளத்தை வழங்குவதாக அந்நாட்டு அரசாங்கம் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]