விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி: அர்ஜென்டினா வெற்றி

28/07/2024 06:17 PM

பாரிஸ், 28 ஜூலை (பெர்னாமா) -- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் காற்பந்து விளையாட்டில் அர்ஜென்டினா ஈராக்கை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

முதல் ஆட்டத்தில், மொராக்கோவுடன் 2-1 என்று தோல்வி கண்டாலும், இரண்டாம் ஆட்டத்தில் வெற்றி பெற்று அர்ஜென்டினா தனது ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற B குழுவுக்கான ஆட்டத்தில் 14-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னணி வகிக்கச் செய்தார்.

இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் ஈராக், ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 62 மற்றும் 84-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து, அர்ஜென்டினா அடுத்த ஆட்டத்திற்கான தனது நுழைவு சீட்டை பெற்றுக் கொண்டது.

C குழுவுக்கான ஆட்டத்தில், டொமினிக்கன் குடியரசை  3-1 என்ற கோல்களில் தோற்கடித்து ஸ்பெயின் காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு நாடுகளும் தலா ஒரு கோலுடன் சமநிலை கண்டாலும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு கோல்களை அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றது.

2020-ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஸ்பெயின் வெள்ளிப் பதக்கம் வென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)