பொது

இந்தியா மற்றும் மலேசியாவிற்கான வர்த்தக உறவு மேம்பட நிறைய வாய்ப்புகள்

28/07/2024 08:13 PM

ஈப்போ, 28 ஜூலை (பெர்னாமா) -- இந்தியா மற்றும் மலேசியாவிற்கான வர்த்தக உறவுகள் தொடர்ந்து வலுபெற நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அதனை, இந்திய வர்த்தக சபையினருடன் நடத்திய சந்திப்பின் மூலம் பகிர்ந்து கொள்ள முடிந்ததாக மலேசியாவிற்கான இந்திய துணைத் தூதர் சுபாஷினி நாராயணன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவில் உபகார சம்வளம் வழி உயர்கல்வியைத் தொடரவும், ஆயர்வேத மருத்துவக் கல்வியை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் இலவசமாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் இந்திய அரசு வழங்குவதாக சுபாஷினி நாராயணன் கூறினார்.

ஈப்போவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த சுபாஷினி நாராயணன் செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

''நிறைய இடங்களைப் பார்த்தோம். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது. அதோடு, இந்தியா மற்றும் மலேசியாவிற்கான வர்த்தக உறவுகள் பற்றி கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது,'' என்றார் அவர்.

ஈப்போவில், இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரம், கலை, கலாச்சாரம் பற்றி ஆராய்ந்ததோடு அவர்களை நேரில் சந்தித்தது குறித்தும் சுபாஷினி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இப்பயணத்தின்போது, ஜாலான் லகாட் தண்டாயுதபாணி ஆலயம், புந்தோங் சீக்கியர் ஆலயம், வரலாற்றுப்ப் பூர்வ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல், ஈப்போ லிட்டல் இந்தியா வளாகம் ஆகிய இடங்களுக்கு சுபாஷினி வருகைப் புரிந்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502