பொது

சமூக ஊடகங்கள் உரிமம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு மிகச் சரியானது - சாஹிட்

28/07/2024 06:25 PM

பாகான் டத்தோ, 28 ஜூலை (பெர்னாமா) -- 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அனைத்து சமூக ஊடக சேவைகளும் இணைய செய்தித் தளங்களும், செயலிக்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி-இன் முடிவு மிகச் சரியான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இதன்மூலம், இணையக் குற்றச்செயல் உட்பட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளின் பயன்பாட்டை களைய முடியும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''உண்மையை வெளிப்படுத்தவும் உண்மையான அடையாளத்தை அறிமுகப்படுத்தவும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டால் ஏன் பயப்பட வேண்டும். பல நாடுகள் தற்போதைய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக சீனா. அவர்கள் கட்டுப்படுத்த அவர்களுக்கு வழி உள்ளது. சிங்கப்பூரும் பதிவு செய்கிறது. இதற்கு காரணம், ஒவ்வோர் இணையப் பயனரும் என்ன எழுதுகிறார்கள் என்பதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதே. கையைக் காட்ட மறுக்கிறார்கள். அதற்குப் பெயர் கோழைத்தனம்,'' என்றார் அவர். 

இன்று, பாகான் டத்தோக்கில், 2024-ஆம் ஆண்டு பாகான் டத்தோ தொகுதி அம்னோ பேராளர் கூட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சமூக ஊடக சேவை மற்றும் இணைய செய்தித் தளங்கள் அனைத்தும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் செயலி சேவை வகுப்பு உரிமம் விண்ணப்பிக்க வேண்டும் என்று எம்.சி.எம்.சி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]