உலகம்

இளம் வாக்காளர்களை கமலா கவர்வார் - இளம் தலைவர்கள் நம்பிக்கை 

28/07/2024 06:38 PM

வாஷிங்டன் டி.சி, 28 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் கமலா ஹரிஸ் இளம் வாக்காளர்களைக் கவர்ந்திழுத்து அவர்களை உற்சாகப்படுத்துவார் என்று அந்நாட்டின் இளம் தலைவர்கள் தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இளைஞர்கள் தலைமையிலான 17 குழுக்கள் கமலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் வாக்குப்பதிவு தம்மை அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்க வழிவகுத்ததாக நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கமலா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பைடனின் ஆட்சிக் காலத்தில் வன்முறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

''2020-ஆம் ஆண்டில், இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜோ பைடனை அமெரிக்க அதிபராகவும், முதல் பெண் துணை அதிபராக என்னையும் தேர்ந்தெடுத்தனர். இளம் வாக்காளர்கள் பங்கேற்றதால், வன்முறை தடுப்பு தொடங்கி பருவநிலை நெருக்கடியை கையாள்வது வரை அனைத்திலும் நாங்கள் மிகவும் முன்னேற்றம் கண்டோம். இந்த நவம்பரில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். மேலும் எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்தத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் வாக்கை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். அது சம்பாதிக்கப்பட வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்வோம்,'' என்றார் அவர். 

இளைஞர்களின் குரல்களைக் கேட்கவும், அமெரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உந்து சக்தியாக மாறவும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் கமலாவின் உரை அமைந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]