பொது

பிரமாண்டமாக நடந்தேறிய ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

28/07/2024 08:12 PM

கோலாலம்பூர், 28 ஜூலை (பெர்னாமா) -- பிரபல இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிரமாண்டமாக நடந்தேறியது.

மூன்று மணி நேரங்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரஹ்மான் இசையமைத்த மற்றும் பாடிய பாடல்கள் அங்கு வந்திருந்த சுமார் 35,000 ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்தது.

சனிக்கிழமை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் இரவு 8.30 மணி அளவில் Slumdog Millionaire திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுடன் இப்பிரமாண்ட நிகழ்ச்சி தொடங்கியது.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்கள் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தின.

குறிப்பாக, 90ஆம் ஆண்டு காலங்களில் ரஹ்மான் இசையில் வெளியான பிரபலமான பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றபோது ரசிகர்களின் ஆரவாரம் அதிகமானது.

மனோ, ஶ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன் உட்பட பல பின்னணி பாடகர்களின் மெல்லிசை மற்றும் விறுவிறுப்பான பாடல்களுடன் நடனப் படைப்புகளும் இடம் பெற்றன.

STAR PLANET ஏற்பாட்டில் நடைபெற்ற Rahman Live in KL 2024 என்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ் ஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.

பிரதமர் குறித்து பேசிய ரஹ்மான், அவர் எளிதில் அணுகக்கூடிய இயல்பான ஒரு மனிதர் என்றும் புகழாரம் சூட்டினார்.

சுமார் 12.00 மணியளவில், இந்த இசை நிகழ்ச்சியில் நிறைவடைந்து.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502