பொது

சீராகி வரும் மூத்த நகைச்சுவை கலைஞர் சத்தியாவின் உடல் நலம்

29/07/2024 04:14 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) --  மிதமான பக்கவாதத்திற்கு ஆளான நாட்டின் மூத்த நகைச்சுவை கலைஞர் சத்தியா என்ற சத்தியா பெரியசாமியின் உடல் நலம் தற்போது சீராக உள்ளது.

1984-ஆம் ஆண்டு கலைத்துறையில் அறிமுகமாகி PIMAI PIMAI TANG TU என்ற தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் மூலம் மக்களைக் கவர்ந்த இவர், இம்மாதம் 16-ஆம் தேதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

வீட்டில் மனைவியோடு காலை உணவு உட்கொண்டிருக்கும் வேளையில், திடீரென அவரின் வலது கை,கால் மறுத்து போனதும் உடனடியாக சத்தியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றார்.

குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டதாக சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

எனவே, மருத்துவரின் ஆலோசனைகளுக்கு இணங்க தற்போது தாம் வீட்டில் ஓய்வில் இருப்பதாக சத்தியா பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.

"இப்போ உடம்பு கொஞ்சம் பரவாயில்லை. காலை மற்றும் மதியம் என்று இரண்டும் நேரமும் உடல்பயிற்சி செய்வதற்கு மருத்துவமனைக்குச் செல்கிறேன். அதனால் உடல் நலம் கொஞ்சம் நன்றாக இருக்கின்றது", என்றார் அவர்.

சுமார் 40 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் நடித்து, பல்லின மக்களால் இரசிக்கப்படும் சத்தியா, முழுமையாக குணமடைந்து மீண்டும் கலைப்பணியாற்றுவது குறித்தும் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

"அடுத்த மாதம் 8-ஆம் தேதி நான் நடித்த அபிநயா என்ற திரைப்படம் வெளியாகவிற்கின்றது. நான் அதில் பேராசிரியாராக நடிக்கிறேன். முற்றிலும் நகைச்சுவை படம். மலேசியாவில் எனக்கென்று அத்தை, மாமா, அக்காள், அண்ணன், அம்மா, அப்பா என்று உறவுகள் இருக்கின்றனர். அதனால் நான் எதற்கும் பயப்பட்ட வேண்டியதில்லை", என்றார் அவர்.

இதனிடையே, உடல் நலம் சீராகி வரும் சத்தியாவிற்கு, தாம் உதவிக்கரம் நீட்டியுள்ளதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)