பொது

ஒப்ஸ் கெசான் 2.0; 244 கடைகளில் விலை உயர்வு அம்சம் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது

29/07/2024 05:40 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஜூன் 8ஆம் தேதி ஒப்ஸ் கெசான் 2.0 தொடங்கப்பட்டது முதல், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் 244-இல் விலை உயர்வு அம்சம் இடம்பெற்றிருப்பதை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் கண்டறிந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அக்கடைகளுக்கு எழுத்துப்பூர்வ அறிவிக்கை வழங்கப்பட்டதாக துணை அமைச்சர் ஃபுடியா சாலே தெரிவித்தார்.

''இந்த அறிவிக்கை காரணக் கடிதம் வழங்குவது போன்று. அதற்கு காரணம் அவர்கள் அதிகமான தகவல்களை வழங்க வேண்டும். சில மூலப்பொருட்களுக்கான செலவு, உற்பத்தி, போக்குவரத்து செலவு போன்றவைக் குறித்து கேட்க எங்களுக்கு அதிகாரம் உண்டு. விலை உயர்வு அம்சம் இருந்தால், விசாரணை அறிக்கை திறக்கப்படும். அதன் தொடர்பில் ஆராய்ந்து, தவறு செய்திருப்பது தெரிய வந்தால் தண்டனை விதிக்கப்படும்,'' என்றார் அவர்.

வழக்கத்திற்கு மாறான விலையில் பொருட்களை விற்கும் கடைகளுக்கு எதிராக கேபிடிஎன் எடுக்கும் நடவடிக்கை குறித்து, இன்று மேலவையில் செனட்டர் டத்தோ சலேஹுடின் சைடின் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)