பொது

பணம் பறித்த சம்பவம்; 2 போலீஸ் உறுப்பினர்கள் கைது

29/07/2024 04:44 PM

காஜாங், 29 ஜூலை (பெர்னாமா) --  காஜாங்கில் பணம் பறித்த சம்பவம் தொடர்பில் அம்மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

அச்சம்பவம் தொடர்பில் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமார் கான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

பணம் பறித்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி குறித்தும் சம்பந்தப்பட்ட ஆடவர் புகார் அளித்துள்ளார்.

அக்காணொளியின் வழி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட அவ்விரு போலீஸ் உறுப்பினர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நாளைவரை இரு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 384-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றச்செயலில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரி மற்றும் போலீஸ் உறுப்பினருடனையும் சிலாங்கூர் போலீஸ் பாதுகாக்காது என்றும் சமரசம் காணப்படாமல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

முன்னதாக, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு போலீஸ் உறுப்பினர்கள், அந்நிய நாட்டு ஆடவரைத் தடுத்து பணம் பறித்ததாக நம்பப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)