உலகம்

வட சீனாவில் கனமழை; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

04/08/2024 05:14 PM

ஷான்சி, 04 ஆகஸ்ட் (பெர்னாமா) --  வட சீனாவில் பெய்த கனமழையினால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்து எட்டாக உயர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் இன்னும் இருபத்து நான்கு பேரைக் காணவில்லை.

ஷாங்க்லோவில் உள்ள ஆற்றைக் கடக்கப் பயன்படுத்தப்படும் இப்பாலம் கடந்த ஜூலை 19ஆம் தேதி இடிந்து விழுந்தது.


மொகாடிஷு

சொமாளியா தலைநகர் மொகாடிஷுவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் முப்பத்து இரண்டு பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும், அறுபத்து மூன்று பேர் காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அல்- குவைடாவின் கிழக்கு ஆப்பிரிக்கா துணை அமைப்பான, அல்-ஷபாப் இத்தாக்குதலை மேற்கொண்டதாக அவ்வமைப்பு தனது வானொலி நிலையத்தின் மூலம் தெரிவித்துள்ளது.


நிஸ்னி டாகில்

ரஷ்யாவில், நிஸ்னி டாகில் நகரில் உள்ள மலைப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பத்து பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஐவர் சிறுவர்களாவர்.

எரிவாயு கலன் வெடித்ததால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று அந்நாட்டின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் ஏழு சிறுவர்கள் உட்பட பதினைந்து பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

மீட்புப் பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.


டாக்கா

வங்காளதேசத்தில் கடந்த மாதத்தில் நடந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் பொது மக்களும் கொல்லப்பட்டதற்கு நியாயம் கோரி சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஸ்லோகங்களையும், அந்நாட்டின் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரியும் கோஷமிட்டனர்.

அதேவேளையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் அரசாங்க ஆதரவாளர்களும் அந்நகரில் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாடங்களால் வன்முறை ஏற்பட்டதில் குறைந்தது முப்பது பேர் காயமடைந்த வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தங்கள் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுவதை ஆளும் கட்சி மறுத்துள்ளது.


பெய்ருட்

இஸ்ரேல் உடனான நெருக்கடி மோசமடைந்து வரும் வேளையில், உடனடியாக லுப்னானை விட்டு வெளியேறுமாறு அங்குள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் அறிவுறுத்தியுள்ளன.

தற்போது அந்நாட்டில் சில விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை ரத்து செய்திருந்தாலும் இதர போக்குவரத்து சேவைகள் இன்னும் இருப்பதாக பெய்ருட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)