பொது

சபா மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட 1,600 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு; இவ்வாண்டிற்கான மொத்த ஒதுக்கீடாகும்

04/08/2024 05:57 PM

கோத்தா கினபாலு, 04 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பெஸ்தா கெ அமாத்தான் எனப்படும் அறுவடை திருநாளான கடந்த மே 31ஆம் தேதி சபா மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட 1600 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு அம்மாநிலத்தின் மேம்பாட்டிற்கு மட்டுமல்ல.

மாறாக, அம்மாநிலத்திற்கு இவ்வாண்டிற்கான மொத்த ஒதுக்கீடாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பள்ளி, பிள்ளைகளின் கல்வி, மக்களின் பாதுகாப்பிற்கான எல்லைப்பகுதி பாதுகாப்பு மற்றும் மாநில மேம்பாடு போன்ற பல்வேறு செலவுகளுக்கு அத்தொகை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த ஒதுக்கீட்டை தாம் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுவதில் உண்மைய்ல்லை என்று கூறிய டத்தோ ஶ்ரீ அன்வார் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்னர் நேரடியாக தம்மிடம் உண்மையைக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அவர் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று, சபா மாநில கெஅடிலான் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

தாம் பிரதமராகப் பதவியேற்றது முதல், சபாவின் ஒதுக்கீட்டை அதிகரிக்கவே முயற்சி செய்து வரும் வேளையில், 2022ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1290 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும் இவ்வாண்டு 1600 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அன்வார் கடந்த மே 31ஆம் தேதி, பெனம்பாங்கில் பெஸ்தா கெ அமாத்தான் 2024-ஐ நிறைவு செய்து வைத்த உரையாற்றும்போது கூறினார்.

இதனிடையே, சபா மக்கள் சிறந்த சாலை வசதிகளைப் பெறும் வகையில், பான் பொர்னியோ நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துமாறு டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள், எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படாமல், விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502