உலகம்

மியன்மாரில் வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்

29/07/2024 07:38 PM

யங்கூன், 29 ஜூலை (பெர்னாமா-சின்ஹுவா) -- மியன்மாரின் தென் பகுதிகள் மற்றும் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளும் நீரில் மூழ்கின.

13 நகரங்களில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, அயர்வாடி, பாகோ, மோன், கயின் ஆகிய மாநிலங்களில் எச்சரிக்கை நிலையைக் கடந்துள்ளது.

பாகோ நகரில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையினால் 4,793 குடும்பங்களைச் சேர்ந்த 18,210 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கயின் மாநிலத்தில் உள்ள மைவாடி நகரில், கனமழை காரணமாக தாங்யின் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் 370 குடும்பங்களைச் சேர்ந்த 4,985 பேர் 11 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அயர்வாடி பகுதியிலும் மோன் மாநிலத்திலும் ரயில் தண்டவாளங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அதேவேளையில், வெள்ளத்தினால் பள்ளிகளும் மூடப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)