பொது

வட தீபகற்ப பகுதியின் எல்லைப் பாதுகாப்பு வசதி மேம்பாட்டிற்கு 10 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு

30/07/2024 04:53 PM

புத்ராஜெயா, 30 ஜூலை (பெர்னாமா) --  கிளந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை உட்படுத்திய வடக்கு தீபகற்ப பகுதியில் எல்லைப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பத்து கோடி ரிங்கிட்டைக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவித்துள்ளது.

குற்றச் செயல்கள் உட்பட பல்வேறு எல்லைப் பிரச்சனைகளைக் களைவதற்கு மட்டுமின்றி மலேசியா மற்றும் தாய்லாந்தின் எல்லைப் பகுதிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த இரு நாடுகளும் கொண்டிருக்கும் கடப்பாட்டுக்கு ஏதுவாகவும் அந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''அதுமட்டுமின்றி, வடக்கு தீபகற்பத்தில் அதற்கான தேவை உள்ளது. இந்த ஆகஸ்ட்
மூன்றாம் தேதி தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தாவை நான் சுங்கை கோலோக் மற்றும் ரந்தாவ் பஞ்சாங்கில் சந்தித்து தீபகற்பம் மற்றும் தென் தாய்லாந்தின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றி பேசுவேன்'', என்றார் அவர்.

எல்லையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தில் தாமதம் ஏற்படாமல் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது பிரதமர் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)