பொது

ஆறு நிறுவனங்களின் சிறிய வணிக விமானங்களின் சேவை தொடங்குகிறது

30/07/2024 05:20 PM

சுபாங், 30 ஜூலை (பெர்னாமா) --  வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி முதல், சிலாங்கூர், சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அசிச் ஷா விமான நிலையத்தில் ஆறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த சிறிய வணிக விமானங்களின் சேவை தொடங்கவிருக்கிறது.

FIREFLY, AIRASIA MALAYSIA, BATIK AIR MALAYSIA, SKS AIRWAYS, TRANSNUSA மற்றும் SCOOT ஆகிய விமான நிறுவனங்கள் செயல்படவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

''பினாங்கிற்குச் செல்லும் பாத்திக் ஏர் மலேசியாவின் முதல் பயணம், ஆகஸ்ட் முதலாம் தேதி மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பின்பு, அதே நாளில் TRANSNUSA விமானம் ஜகார்த்தாவிலிருந்து மதியம் இரண்டும் மணிக்கு அங்கு தரையிறங்கவிருக்கிறது'', என்றார் அவர்.

இன்று, சுபாங் விமான நிலையம் எனப்படும் LTSAAS-யைப் பார்வையிட்ட பின்னர், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து லோக் செய்தியாளர்களிடம் பேசினார்.

விமானப் பயணங்களின் நேரம், காலை மணி 6 தொடங்கி இரவு மணி 10 வரையில் மட்டுமே என்றும், விமான நிலையம் குடியிருப்புப் பகுதியில் இருப்பதால் நள்ளிரவு விமானப் பயணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)