பொது

சில காரணங்களால் SMART LANE பயன்பாடு அமல்படுத்த இயலவில்லை

30/07/2024 05:32 PM

கோலாலம்பூர், 30 ஜூலை (பெர்னாமா) --  கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் SMART LANE பயன்பாடு சில காரணங்களால் அமல்படுத்த இயலவில்லை.

அந்நெடுஞ்சாலை முழுவதும் வளைவுகளும் மேடுகளும் நிறைந்திருப்பது, கருத்தில் கொள்ள வேண்டிய காரணங்களில் ஒன்று என்று பொதுப்பணி அமைச்சர்  டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி கூறினார்.

நெடுஞ்சாலையின் எந்த பகுதியிலும் SMART LANE-யைச் செயல்படுத்த அனுமதி வழங்குவதற்கு முன்பு, வேறு சில அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

''நெரிசலைத் தவிர்த்து, நெடுஞ்சாலையின் எந்த பகுதியிலும் SMART LANE-யைச் செயல்படுத்த அனுமதிப்பதற்கு முன்பு சாலையின் விரிவாக்கம் உட்பட சாலையின் சீரமைப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். கோலாலம்பூர் - காரக் நெடுஞ்சாலையில் SMART LANE-யைச் செயல்படுத்த முடியாது. ஏனெனில், சாலையின் ஓரங்கள் அல்லது அவசர பாதையின் விரிவாக்கம் வாகனங்கள் செல்வதற்குப் போதுமானதாக இல்லை. அதோடு சாலைகளும் வளைவுகள் மற்றும் மேடுகள் நிறைந்ததாக உள்ளன'', என்றார் அவர்.

இன்று, மக்களவையில், குறிப்பாக வார இறுதியில் சாலைகளின் நெரிசலைக் குறைக்க கோலாலம்பூர் - காரக் நெடுஞ்சாலையில் SMART LANE பாதையைச் செயல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து, செனட்டர் மனோலான் முஹமட் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)