பொது

மலேசியாவைப் பின்பற்றி சீனாவும் 30 நாள்கள் விசா விலக்கு வழங்கலாம்

30/07/2024 05:39 PM

கோலாலம்பூர், 30 ஜூலை (பெர்னாமா) --  சீனப் பிரஜைகளுக்காக மலேசியா முப்பது நாள்கள் விசா விலக்கு வழங்கியிருப்பதைப் போன்று மலேசியர்களுக்கும் சீனா அதே விசா விலக்கு வழங்க வேண்டும் என்று மலேசியா எதிர்பார்க்கின்றது.

தற்போது மலேசியர்கள் 15 நாள்களுக்கு விசா இல்லாமல் அந்நாட்டிற்குச் செல்ல சீனா அனுமதி அளித்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

''பரஸ்பர உறவின் அடிப்படையில் நாங்கள் வழங்கியதைப் போன்று சீனாவும் முப்பது நாட்கள் விசா விலக்கை வழங்கினால் அந்நாட்டு மக்களுடன் சிறந்த நல்லுறவை வளர்த்துக் கொள்ள மலேசிய மக்களுக்கு இலகுவாக இருக்கும். இது மேலும் மலேசியர்கள் சீனாவுக்குச் செல்வதைக் குறிப்பாக வணிக அடிப்படையிலான பயணத்தை எளிதாக்குகிறது'', என்றார் அவர்.

மலேசியா மற்றும் சீனாவின் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எவ்வகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தின் போது பேராசிரியர் எமரித்துஸ் டத்தோ ஶ்ரீ டாக்டர் அவாங் சரியன் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, பிஎல்வி திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி சீனாவுக்கும், இந்தியாவுக்கும், மலேசியா முப்பது நாள்கள் விசா விலக்கு வழங்கி வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)