உலகம்

சீனாவுடன் சுமூகமான உறவு இல்லை - இந்தியா மனம் திறப்பு

30/07/2024 06:16 PM

தோக்கியோ, 30 ஜூலை (பெர்னாமா) -- சீனாவுடன் சுமூகமான உறவை கொண்டிருக்கவில்லை என்று இந்தியா தெரிவித்திருக்கிறது.

2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம், இரு நாடுகளுக்கும் நிகழ்ந்த இராணுவ மோதலில் குறைந்தது 20 இந்திய இராணுவ வீரர்களும் சீனாவின் நான்கு இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகிறார்.

"சீனாவுடனான உறவு எப்படி இருக்கிறது என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அவர்களுடன் சுமுகமான உறவு இல்லை. அவர்கள் இப்போது இயல்பாக இல்லை. ஆனால் ஒரு அண்டை நாடாக, சிறந்த உறவை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அவர்கள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து, அவர்கள் கடந்த காலத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மதிப்பளித்தால் மட்டுமே அது நடக்கும்,'' என்றார் அவர்.

நீடித்து வரும் இந்த நெருக்கடி அவ்விரு நாடுகளின் மலைப் பகுதியில் நீண்ட கால மோதலாக மாறியுள்ளது.

இவ்விரு நாடுகளின் எல்லையிலும் பீரங்கி, டாங்கிகள் மற்றும் போர் விமானங்களின் ஆதரவுடன் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லையில் உள்ள இராணுவ வீரர்களை மீட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக கடந்த வாரம் லாவோஸ்சில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் சீனா தெரிவித்திருந்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)