பொது

இந்திய இளைஞர்களை அதிகம் அச்சுறுத்தும் இருதய நோய்

31/07/2024 04:36 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) --  மனித உடலில் ரத்தவோட்டம் சீராக இயங்க முக்கிய பங்காற்றுவது இதயம்.

இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட முடியும்.

இதயத்தில் ஏற்படும் கோளாரினால், உடலில் உள்ள பிற பாகங்களிலும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்கிறார் கோலாலம்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் சரோஜினி தேவி சிம்மாசலம்.

ஆனால், மலேசியாவைப் பொருத்தவரை, இந்தியர்கள், குறிப்பாக ஆண்களுக்கு இருதய நோய் அதிகம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆண்டுக்கு சுமார் 1 கோடியே 79 லட்சம் மக்கள் இருதய நோயால் பாதிக்கப்படுவதோடு, மரணத்தையும் எதிர்நோக்குவதாக, உலக சுகாதார நிறுவனம், WHO குறிப்பிட்டுள்ளது.

இதயம் சார்ந்த நோய்கள் பலவகை உண்டு.

அவை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறியைக் காட்டும்.

அதிலும், பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்துவது போன்று தோன்றும் இருதய நோய்க்கும் மாரடைப்பிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாக கூறுகிறார் டாக்டர் சரோஜினி.

''இதய நோய் என்றால் நமது நாடித் துடிப்பு முற்றிலுமாக செயழிந்து விடும். ஆனால், மாரடைப்பு என்பது அவர்களது இரத்த குழாயில் அடைப்பு இருந்தால் அது நம் இதயத்திற்குப் போவாது. இதயம் மற்றும் தசைகளில் இரத்தம் போகாமல் இருக்க ஒருவருக்கு மரடைப்புக்கான வலி ஏற்படும்'', என்றார் அவர்.

இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக, 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இந்நோய் அதிகம் அச்சுறுத்துவதாக டாக்டர் சரோஜினி தெரிவித்தார்.

அதோடு, மிதமான அறிகுறிகளுடன் ஒருவருக்கு ஏற்படும் இருதய நோய், மாரடைப்பைக் காட்டிலும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.

''இரண்டுமே ஆபத்தானது தான். ஆனால், எது அதிக ஆபத்து என்று பார்த்தால் இதய துடிப்பு செயலிழப்புதான். ஏனென்றால், நாடி துடிப்பு உட்பட எந்த செயல்பாடுகளும் உடலில் இருக்காது. அதேபோல் மாரடைப்பும் ஆபத்துதான். ஆனால், மாரடைப்பின் போது நாடியின் துடிப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆக, உடனடி சிகிச்சையின் மூலம் அதை குணப்படுத்த முடியும்'', என்று அவர் கூறினார்.

தற்போதைய வாழ்க்கைச் சூழலில், வேலைப்பழு, உணவு முறை போன்ற காரணங்களில் மக்கள் பல்வேறு வகையான ஆரோக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மரணத்தை விளைவிக்கும் ஆபத்தையும் கொண்டிருப்பதாக அவர் எச்சரித்தார்.

எனினும், நவீன வாழ்க்கை முறை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த அலட்சிய போக்கினாலேயே அதிகமான இந்தியர்கள் இந்நோய்க்கு ஆளாவதாக அவர் கூறினார்.

மேலும், முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் இந்நோய்ப் பாதிப்பிலிருந்து ஒருவர் தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் வழியுறுத்தினார்.

எனவே, ஒவ்வொருவரும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சரியான வழிகளைக் கையாளுமாறும் அவர் கேட்டு கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)