பொது

தேசிய வீரர் தினக் கொண்டாட்டத்தில் மாமன்னர் கலந்து கொண்டார்

31/07/2024 05:44 PM

புத்ராஜெயா, 31 ஜூலை (பெர்னாமா) --  2024-ஆம் ஆண்டின் தேசிய வீரர் தினத்தை முன்னிட்டு, இன்று புத்ராஜெயா டத்தாரான் ஃபளாவானில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா சாரித் ஃசோபியாவும் கலந்து கொண்டனர்.

மலேசிய இராணுவப் படை தலைமையேற்ற இந்நிகழ்வில், அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய இராணுவப் படை, மலேசிய ஆயுதப் படை வீரர்கள் சங்கம் மற்றும் மலேசிய முன்னாள் போலீஸ் சங்கம் ஆகிய நான்கு பிரிவுகளை உள்ளடக்கி அணிவகுப்பு நடைபெற்றது.

நெகாராக்கூ பண் இசைக்கப்பட்டதும் தொடங்கிய இவ்விழாவில் இருபத்து ஒருமுறை பீரங்கிகள் முழங்கின.

அதோடு, முதன்மை மரியாதை அணிவகுப்பை சுல்தான் இப்ராஹிம் பார்வையிட்டார்.

அரச மலேசிய ஆகாயப்படையிலிருந்து LT KOL ABANG RADUAN ABANG MADIHI தலைமையில் நடைபெற்ற தேசிய வீரர் தின அணிவகுப்பில் பதினெழு அதிகாரிகளும், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய இராணுவப் படையின் அறநூற்று எண்பத்து மூன்று உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, 2024-ஆம் ஆண்டு வீரர் தினத்தை முன்னிட்டு புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2000-ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நடந்த Al-Ma'unah தாக்குதல் சம்பவம் குறித்த "OP SUBUH" என்ற படைப்பும் இடம்பெற்றது.

இப்படைப்பு, அச்சம்பவத்தில் பலியான பாதுகாப்பு உறுப்பினர்களான சார்ஜன் சகாதேவன் ராஜூவையும் திரம்பர் மேத்யூ அனக் மேடானையும் நினைவுகூறும் வகையில் படைக்கப்பட்டது.

நாட்டை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்றுவதில் தமது கணவரின் துணிச்சலான நடவடிக்கையை இப்படைப்பு வெளிப்படுத்தியதாக சார்ஜன் சகாதேவன் ராஜூ மனைவி சு. மல்லிகாராணி தெரிவித்தார்.

''இச்சம்பவம் நிகழ்ந்து 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. வீரர் தினத்தில் இத்தகையப் படைப்பைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மிகவும் நல்ல மனிதர். எங்கள் குடும்பம், அண்ணம் தம்பிகள் அனைவரும் நல்லவர்கள். இப்படைப்பைப் பார்க்கும்போது இப்படித்தான் நடந்திருக்கிறது என்று தெரிகிறது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கவலையாக உள்ளது'', என்றார் அவர்.

தாம் போலீஸ் படையில் இணைய தமது தந்தையே தமக்கு பக்கபலமாக இருந்ததாக அவரின் மகன் இஸ்பெக்டர் பாலதேவன் தெரிவித்தார்.

''படிவம் 5-க்கு பிறகு நான் போலீசில் இணைய விரும்பினேன். ஆனால், மேற்கல்வியைத் தொடருமாறு என் தந்தைதான் எனக்குத் தெரிவித்தார். எனக்கு ஜோகூர் பாருவில் மேற்கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைத்தபோது என் தந்தைதான் என்னுடன் வந்திருந்தார். மூன்று வாரங்கள் என்னுடன் தங்கி விட்டு திரும்பியப் பின்னர்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. பெருமையாகவும் அதேவேளை கவலையாகவும் உள்ளது. இதுபோன்ற நல்ல தந்தை கிடைப்பது கடினம்'', என்று அவர் கூறினார்.

Al-Maunah குழுவின் நடவடிக்கையைக் கண்டறிய அவர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்தபோது சார்ஜன் சகாதேவனும் திரம்பர் மேத்யூவும் சில நாட்களுக்குப் பிணையாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்க ரகசியங்களை வெளியிடாத காரணத்தினால் அவர்கள் கொல்லப்பட்டனர்.

 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)