பொது

123,572 நோயாளிகள் மடானி மருத்துவத் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்

31/07/2024 05:52 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) --  இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில், குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த ஒரு லட்சத்து இருபத்து மூன்றாயிரத்து ஐநூற்று எழுபத்து இரண்டு நோயாளிகள், மடானி மருத்துவத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில், சுமார் ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 151 ஆயிரத்து 199 சிகிச்சைகள், தகுதிப் பெற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.

''காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சுளுக்கு, தலை வலி மற்றும் மிதமான பதற்றம் உள்ளிட்ட நோய்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. உதவி பெற்ற நூறு விழுக்காட்டினரும் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களாவர். ஏனெனில், ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர்ரைப் பெறுபவர்களே மடானி மருத்துவத் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாவர்'', என்றார் அவர்.

இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில், பி40 பிரிவினருக்கு வழங்கப்பட்ட மடானி மருத்துவத் திட்டம் பயன்பாட்டின் விகிதம் குறித்து செனட்டர் டத்தோ அஹ்மாட் இப்ராஹிம் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)