பொது

11 கோடி ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தில் ஊழல்: டத்தோ அந்தஸ்து கொண்ட நபர் உட்பட மூவர் கைது

31/07/2024 06:21 PM

புத்ராஜெயா, 31 ஜூலை (பெர்னாமா) --  பதினொரு கோடி ரிங்கிட் மதிப்பிலான வீடமைப்புத் திட்டத்திற்காக டத்தோ அந்தஸ்து கொண்ட தேசிய வீடமைப்பு நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றின் முன்னாள் அதிகாரி உட்பட மூவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது.

நேற்று மாலை மணி 6.30-இல் இருந்து இரவு மணி 7-க்குள், புத்ராஜெயா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தங்களின் வாக்குமூலத்தை அளிக்க வந்தபோது, நாற்பது முதல் அறுபது வயதிற்கு உட்பட்ட அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பில், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்த பின்னர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

SPNB இயக்குநர் வாரியத்தின் ஒப்புதலின்றி, பஹாங், குவாந்தான் மாவட்டத்தில் RUMAH ASPIRASI RAKYAT  திட்டத்தை உட்படுத்திய கூடுதல் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக அவர்கள் அனைவரும் கட்டுமான நிறுவனம் ஒன்றிடமிருந்து கையூட்டுத் தொகையைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம், ஒரு தலைப்பட்சமாக இருப்பதால் SPNB பல லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நஷ்டத்தைச் சந்திக்க நேரிட்டதாகவும் நம்பப்படுகிறது.

நேற்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரையில், ஐந்து நாட்களுக்கு அவரகளை தடுப்புக் காவலில் வைக்க புத்ராஜெயா மாஜிஸ்டிரேட் நீதிமன்ற, மாஜிஸ்டிரேட் இர்சா சுலைக்கா புர்ஹானுடீன் உத்தரவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)