பொது

38,000 ரிங்கிட் மதிப்புடைய போலியான ஊதியக் கோரல்; மாரா பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

31/07/2024 08:28 PM

ஷா ஆலாம், 31 ஜூலை (பெர்னாமா) --  முப்பத்து எட்டாயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலியான  ஊதியக் கோரலை சமர்பித்ததாக, இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட 18 குற்றச்சாட்டுகளை  மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மறுத்து விசாரணைக் கோரினார்.  
 
நீதிபதி டத்தோ அனிதா ஹாருன் முன்னிலையில்,  தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது  64 வயதுடைய பேராசிரியர் டாக்டர் ஹபிசா முஹமட் நவாவி அதனை மறுத்தார். 

உள்நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் இணைந்து, ஆராய்ச்சிப் பணிகளுக்காக அதன் உதவியாளர்களிடம் சம்பளத்தை வழங்குவதாக கோரி நான்கு நபர்களை ஏமாற்றியதாக ஹபிசா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட ஆய்வு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2021 ஏப்ரல் தொடங்கி 2022-ஆம் ஆண்டு அக்டோபர் வரை அவர் இக்குற்றச் செயலைப் புரிந்ததாக புகார் கூறப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் செக்‌ஷன் 18 மற்றும் செக்‌ஷன் 28 உட்பிரிவு (1) மற்றும் (c)இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து மடங்கு அபராதம் அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்று முன்னதாக கூறப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)