பொது

ஒருமைப்பாட்டு அமைச்சின் உருவாக்கத்தில் 'மித்ரா திட்ட வரைவு'

31/07/2024 06:54 PM

புத்ராஜெயா, 31 ஜூலை (பெர்னாமா) -- இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்டபோது, இந்திய சமூகத்தின் மேம்பாடும் அவர்களின் உருமாற்றத்தையும் முன்னிறுத்தி முதன்முறையாக திட்டவரைவு ஒன்றை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.

அதன் பிறகு, சில காரணங்களை முன்னிறுத்தி அப்பிரிவு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படத் தொடங்கினாலும், தமது தரப்பு தொடங்கிய அத்திட்ட வரைவு ஒருமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

மித்ராவின் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால பயண அடிப்படையிலான திட்டமாகவே 260 பக்கங்கள் கொண்ட இத்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 தொடங்கி ஜூலை 6-ஆம் தேதி வரையில், சுமார் 16 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அமைச்சின் அனைத்து முயற்சிகளுக்கும் PEMANDU ASSOCIATES நிறுவனம் பெரும் துணையாக இருந்தது.

இத்திட்டவரைவின் முத்தாய்ப்பு அங்கமாக முதன் முறையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை சந்தித்து மித்ராவின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்பட்டுள்ளதாக சரஸ்வதி கூறினார்.

"அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கினாலும் மக்கள் அதன் பயனாளிகளாக இருக்கின்ற காரணத்தால் அது முறையாக அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அதை இன்னும் எவ்வாறு மேம்படுத்துவது? எப்படி செம்மைப்படுத்துவது என்று மக்களிடம் கருத்து கேட்கும் ஓர் ஆய்வை அமைச்சு மேற்கொண்டது. பொதுமக்களிடமிருந்து பெற்ற கள ஆய்வின் விவரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டறை நடத்தப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20, 21 ஆகிய இரு தினங்களில் புத்ராஜெயாவில் நடைபெற்ற அப்பட்டறையில் அரசாங்கம், அது சார்புடைய நிறுவனங்கள், அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கல்விமான்கள் என்று மொத்தம் 115 பேர் கலந்து கொண்டனர்.

மக்களின் பிரதிநிதிகளான அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வைத் தொடர்ந்து, மித்ராவின் தொலைநோக்குத் திட்டத்தை வரையறுப்பதற்காக, அவர்கள் வழங்கியிருந்த பரிந்துரை, கருத்துகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இத்திட்டவரைவில் இணைத்துள்ளதாகவும் சரஸ்வதி கூறினார்.

தூரநோக்கு சிந்தனையுடன், தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய சமுதாயம் மிளிர, இந்திய விவகாரங்களுக்கான தேசிய மன்றம், மித்ராவில் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை இத்திட்டவரைவில் பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளதையும் சரஸ்வதி சுட்டிக்காட்டினார்.

"எவ்வாறு புதிய திட்டங்கள், புத்தாக்க சிந்தனைகளை அமல்படுத்துவது? குறிப்பாக நாட்டின் தொழில்நுட்ப மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கின்றபோது, கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அதே திட்டங்களை மீண்டும் மீண்டும் நடத்தக்கூடாது. இவ்வாறு தேவைகளை அறிந்து, தேசிய நீரோட்டத்தைப் புரிந்து காலமாற்றத்திற்கு ஏற்ப அதற்குண்டான திட்டங்களை வரையறுக்க மித்ரா நிர்வாகத்தின் கீழ் ஒரு பிரிவு செயல்பட வேண்டும்," என்றார் அவர்.

இவற்றுடன், ஆண்டுதோறும் மித்ராவுக்கென அரசாங்கம் வழங்கும் பத்து கோடி ரிங்கிட் நிதியும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற குறைப்பாடு எழுந்த வண்ணமாக உள்ளது.

இதைக் களையும் வகையில், மித்ராவில் பயன்படுத்தப்படாத மீதப் பணத்தை, அமானா மித்ரா கணக்கில் சேர்த்து வைப்பதுடன், மித்ரா நிதியை முறையாகப் பயன்படுத்தி அதற்கான கணக்கை சரிவர காட்டுபவர்களுக்கு மட்டுமே கூடுதல் நிதி வழங்க ஆவன செய்ய வேண்டும்.

இவற்றை முறையாக கண்காணிக்க நிதி நிர்வாகம் ஒன்று மிகவும் அவசியமானது என்று, இன்று தமது அமைச்சில் நடைபெற்ற மித்ரா திட்டவரைவு குறித்து விளக்கக் கூட்டத்தில் சரஸ்வதி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)