பொது

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் மின்னியல் ஆவண செயல்முறை அடுத்தாண்டு செயல்படலாம்

01/08/2024 05:49 PM

கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --  மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மேம்படுத்திய TAGS எனப்படும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புக்கான நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் மின்னியல் ஆவண செயல்முறை அடுத்தாண்டு செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செயல்முறை, பாதிக்கப்பட்டவர்கள் இணையம் மூலம் நேரடியாக TAGS-இடம் புகாரளிக்க உதவுவதோடு சபா, சரவாக்கின் புவியியல் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும் அது உருவாக்கப்பட்டதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்தார்.

''இந்த நடுவர் நீதிமன்றம் எந்த நாள், நேரம் மற்றும் எந்த இடத்திலும் கூடலாம். அந்நீதிமன்றத்தின் தலைவர் நிர்ணயிப்பது போல, சபா, சரவாக்கிலும் நீதிமன்ற உறுப்பினர்களை அமைச்சு நியமிக்கும். கிழக்குக் கடற்கரை மாநிலங்களிலிருந்து புகார் கிடைத்தால், அந்நீதிமன்றம் அங்கும் கூடலாம்,'' என்றார் அவர். 
 
இன்று, மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது எழுப்பப்பட்டக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார். 

இவ்வாண்டு மார்ச் எட்டாம் தேதி இந்த செயல்முறை உருவாக்கப்பட்டதிலிருந்து ஜூலை மாதம் வரையில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பிலான ஐந்து புகார்களை TAGS பெற்றுள்ளதாக டாக்டர் நோராய்னி மேலும் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)