பொது

செகாம்புட் அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத்துறை சோதனை; 18 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

02/08/2024 06:21 PM

கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று அதிகாலை, செகாம்புட்டில் உள்ள ஓர் அடிக்குடிமாடி குடியிருப்பில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர, ஜேஐஎம்கேஎல் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதில் அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்த சட்டவிரோத குடியேறிகள் பல தந்திர முறைகளைப் பயன்படுத்திய வேளையில், அதில் ஒரு வங்காளதேச ஆடவர்
10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் மேல் மாடியில் பதுங்கி இருந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வீட்டை சோதனை செய்தபோது 40 வயதுடைய அவ்வாடவர் மறைந்திருப்பதை குடிநுழைவுத் துறையினர் கண்டுபிடுத்தனர்.

அந்த ஆடவருக்கு வேலை பெர்மிட் ஏதும் இல்லை என்ற நிலையில், அவரின் பயண ஆவணமும் காலாவதியாகி இருந்தது.

அவருடன், ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 18 சட்டவிரோதக் குடியேறிகளைக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அக்குடியிருப்பில் கைது செய்தனர்.

கட்டடங்களைக் கழுவும் பணியாளராக இருக்கும் அந்த வங்காளதேச ஆடவர், தாம் சோதனையில் சிக்கிக்கொள்ளாமல் தொடர்ந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒளிந்து கொண்டதாக கூறினார்.

இரண்டு வயது தொடங்கி 60 வயது வரையில்,ஆறு வங்காளதேச ஆடவர்கள், சிறுவர்கள் உட்பட இந்தோனேசியர்கள் ஐவர், இலங்கையைச் சேர்ந்த மூவர், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இருவர் ஆகியோருடன் பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைதானதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முஹமட் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

நள்ளிரவு மணி 12 தொடங்கி பின்னிரவு மணி 3 வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் மொத்தம் 104 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)