சிறப்புச் செய்தி

நாடு முழுவதும் வெற்றிகரமாக திரைகண்டிருக்கும் 'VIJAY LLB THE ADVOCATE' திரைப்படம்

02/08/2024 06:11 PM

கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) --  மலேசியாவில், தமிழ் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் தமிழ் படமாக 'விஜய் LLB THE ADVOCATE' திரைப்படம் வெளியீடு கண்டுள்ளது.

கல்வியில் நிலவும் மோசடி, அது குறித்து பேசும் சட்டம், வழக்கு, விசாரணை என்று திகில் மர்மம் கலந்த கதை அம்சத்துடன், நேற்று தொடங்கி இப்படம் நாடு முழுவதும் திரைகண்டிருக்கின்றது.

ராகா வானொலி அறிவிப்பாளராக மக்களைக் கவர்ந்த உதயா, விஜய் LLB எனும் இத்திரைப்படத்தில் வழக்கறிஞராக முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

கல்வி ரீதியில் நிலவும் மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதை கருவாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கின்றார் எழுத்தாளர் மதியழகன் முனியாண்டி.

இப்படத்தில், பெரும்பான்மையான காட்சிகள் நீதிமன்ற வளாகத்தையே மையமிட்டிருப்பதால், மக்களுக்கு அதில் சற்றும் சளிப்பு ஏற்படாதவாறு காட்சிகள் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளதாக விஜய் LLB படத்தின் தயாரிப்பாளர் உதயா கூறினார்.

''வெறுமனே வழக்குகளாக மட்டுமே இருந்தால் நமக்கு சோர்வு தட்டிவிடும். வழக்கு நடக்கும், வழக்கு நடக்கும்போது அந்த சாட்சிகாக நடந்த விஷயங்கள் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்து விடும். இதுவே தொடர்சியாக நடக்கும். ஆக, அந்த சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இருக்காது'', என்றார் அவர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்குப் புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும் அளவிற்கு அதன் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாக, அவர் தெரிவித்தார்.

''நீதிமன்றத்தில் பல புதிய விஷயங்கள் வந்துவிட்டது. அதேல்லாம் நம் பார்க்காத விஷயங்கள். அவை அனைத்தும் நாங்கள் இப்படத்தில் காட்டியிருக்கோம்'', என்று அவர் கூறினார்.

அண்மைய காலமாக, இந்திய திரைப்படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மலேசியா திரைப்படங்களும், அறிவியல், சரித்திரம், தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு நிலைகளில் அதிகம் முன்னேற்றம் கண்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

அந்த வரிசையில், விஜய் LLB சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு திரை விருந்தாக அமையும் என்று பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்க்காணலில் உதயா நம்பிக்கை தெரிவித்தார்.

அதோடு, கலைத்துறையில் புதிய முகங்களை அறிமுக்கப்படுத்தும் விதமாக, சுமார் நாற்பது புதிய கலைஞர்களை இப்படத்தில் தாங்கள் இணைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய அளவில், சுமார் ஐம்பது திரையரங்குகளில் ஒருமாத காலத்திற்கு விஜய் LLB திரையிடப்பட்டு, அதன் மூலம் முப்பது லட்சம் ரிங்கிட் வரை வசூல் சாதனை எட்டப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் உதயா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)