சிறப்புச் செய்தி

தமிழ்ப்பள்ளிகளை ஆவணப்படுத்துகிறது 'விருட்சமாகும் விழுதுகள்'

02/08/2024 06:26 PM

கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) --  மலேசியத் தமிழர்களின் அடையாளத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதில் தமிழ்ப்பள்ளிகள் முதன்மை வகிக்கின்றன.

தமிழ் மற்றும் தமிழர் தொடர்புடைய கலாச்சாரமும் பண்பாடும் தமிழ்ப் பள்ளிகளின் மூலமே மாணவர்களிடம் விதைக்கப்படுகிறது என்றாலும் அங்கு மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு உள்ளதை மறுப்பதற்கில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படும் நிலையில் தொன்று தொட்டு தொடங்கிய, தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றினை பேசுவதோடு, நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை 'விருட்சமாகும் விழுதுகள்' என்ற வாரந்திர அங்கத்தில் மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கிறது பெர்னாமா செய்திகள்.

மலேசியாவில், தற்போது 530 தமிழ்ப்பள்ளிகள் பதிவில் இருக்கும் நிலையில் அதில் 527 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன.

எஞ்சிய மூன்று பள்ளிகள் மாணவர்கள் பற்றாக்குறையினால் செயல்பாட்டில் இல்லை.

நாட்டின் 11 மாநிலங்களில் செயல்படும் தமிழ்ப்பள்ளிகளில் சுமார் எட்டாயிரம் ஆசிரியர்கள் பணிப்புரியும் வேளையில் 85 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்.

ஒரு காலத்தில், தமிழ்ப்பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்திருப்பதற்குப் பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இந்திய சமுதாயத்தில் பிறப்பு விகிதம் குறைவு, இதர இனப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவது குறைந்த எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடு, தூரம் என்று பல காரணங்கள் வரிசையில் உள்ளன.

தமிழ்ப்பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பினால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா என்ற அச்சத்தாலும் குழப்பத்தாலும், சில பெற்றோர்கள் எடுக்கும் முடிவானது பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் எஸ்.எஸ் பாண்டியன் தெரிவித்தார்.

மலாய், சீனம் மற்றும் அனைத்துலக பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர். ஓர் ஆண்டிற்கு  11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான மாணவர்கள்தான் தமிழ்ப்பள்ளிகளில் பதிவாகின்றனர்,'' என்றார் அவர்.

அந்த அச்சத்திற்கும் குழப்பத்திற்கும் தீர்வு காண்பதற்கான ஒரு கருவியாக தமிழ்ப்பள்ளிகளை வாரந்தோறும் அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தும் முயற்சியைப் பெர்னாமா தமிழ்ச் செய்தி மேற்கொள்வது ஒரு சமுதாய கடப்பாடாக தாம் கருதுவதாக பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான பாண்டியன் குறிப்பிட்டார்.

 ''ஒரு பள்ளியை இந்த ஆவணப் படத்தின் மூலமாக தெரிந்துக் கொள்ள முடியும். தமிழ்ப்பள்ளிகளின் உண்மை நிலவரங்களை மக்கள் அறிந்துக் கொள்வார்கள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இது அமையும்,'' என்றார் அவர்.

இதற்காக, தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசியர்களும் ஆசிரியர்களும் தங்களது பள்ளிகள் தொடர்பான தகவல்களைப் பெர்னாமா செய்திகளுக்கு வழங்கி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதர இன பள்ளிக்களுக்கு நிகராக தமிழ்ப்பள்ளிகளும் இயங்குவதற்காக, அது சார்ந்த அமைப்புகள் உட்பட அரசாங்க சார்பற்ற இயக்கங்கள், சங்கங்கள் இந்திய சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதில், நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை அறிமுகப்படுத்தும் விதமாக பெர்னாமா செய்திகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 'விருட்சமாகும் விழுதுகள்' எனும் சிறப்பு அங்கம் விரைவில் மலர விருக்கின்றது.

இந்த முன்னெடுப்பின் வழி மலேசியாவில் செயல்படும் தமிழ்ப்பள்ளிகளை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள முடிவதோடு அதன் வளர்ச்சியிலும், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)