பொது

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நேரடிப் போட்டி

03/08/2024 04:18 PM

குவா மூசாங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி, பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் வேட்பாளராக கிளந்தான் மாநில அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் முஹமாட் அஸ்மாவி பிக்ரி அப்துல் கானியைத் தேசிய முன்னணி நிறுத்தியிருக்கும் நிலையில் அரச மலேசிய கடற்படையின் முன்னாள் உறுப்பினர் முஹமாட் ரிஸ்வாடி இஸ்மாயிலைப்  பாஸ் தனது வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

"வேட்மனு தாக்கலுக்கான பாரங்களை நான் சரிபார்த்தேன். சரிபார்ப்புக்குப் பின்னர் எனக்கு மனநிறைவாக இருந்ததை அடுத்து அவர்களின் பாரங்களை நான் நிராகரிக்கவில்லை. இதன்வழி, நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பின்வருமாறு நான் உறுதி செய்கிறேன். முதலாவது பாஸ் கட்சியைப் பிரதிநிதிக்கும் ரிஸ்வாடி இஸ்மாயில், இரண்டாவது தேசிய முன்னணியின் அவி", என்றார் அவர்.

இன்று காலை மணி பத்துக்கு, குவா மூசாங் மாவட்ட மன்றம், பெர்டானா வளாகத்திலுள்ள பெர்டானா மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து இச்சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அவ்விருவரும் தகுதிப் பெற்றிருப்பதாக நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் நிர்வாக அதிகாரி நிக் ரய்ஸ்னான் டாவுட் அறிவித்தார்.

ஜூன் 13-ஆம் தேதி, முஹமாட் அசிசி அபு நயிமின் உறுப்பியம், பெர்சத்து கட்சியால் நீக்கப்பட்டதால், ஜூன் 19-ஆம் தேதி, அத்தொகுதி காலியாகியிருப்பதாக கிளந்தான் மாநில சட்டமன்றத் தலைவர் டத்தோ முஹமாட் அமார் நிக் அப்துல்லா அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)